கோவை மாவட்டத்தில் நிலவும் வறட்சியால் பயிர்கள் காய்ந்து போனதால் விவசாயிகளுக்கு குறைந்தபட்சமாக ரூ.12.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவு குறைந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையில் வறட்சியின் தாக்கத்தால் ஏற்படும் இழப்பும் விவசாயிகளை தாங்க முடியாத துயரத்துக்கு ஆளாக்கியுள்ளது.
தொழில் நகரான கோவை மாவட்டத்தில் மட்டும் சுமார் 2.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக சோளம், மக்காச்சோளம் உள்ளிட்ட சிறு பயிர்கள் 95 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படும். தோட்டக் கலைப் பயிர்கள் 85 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்படுகின்றன.
கோவை மாவட்டத்தின் தொண்டாமுத்தூர், ஆனைமலை வட்டாரங்களில் நெல் பயிரிடப்படுகிறது. இதில் ஆனைமலை பகுதியின் பழைய மற்றும் புதிய ஆயக்கட்டுப் பகுதிகளுக்குத் தேவையான தண்ணீர் ஆழியாறு அணையில் இருந்து வழங்கப்படுகிறது. இது தவிர தொண்டாமுத்தூர் பகுதியில் சுமார் 375 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இதில் வறட்சியால் 125 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் காய்ந்து விட்டன. ஓர் ஏக்கருக்கு விவசாயிகள் செய்த செலவு ரூ.3000 வீதம் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.3.75 லட்சம்.
சோளம், மக்காச்சோளம் ஆகிய சிறு தானியங்கள் சுமார் 95 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு வந்தன. ஆனால் இந்த ஆண்டு 67 ஆயிரத்து 500 ஏக்கரில் மட்டும் பயிரிடப்பட்டுள்ளன. இதில் சுமார் 14 ஆயிரத்து 750 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த சிறு தானியங்கள் காய்ந்துவிட்டன. ஏக்கருக்கு ரூ.5000 வீதம் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.7.38 கோடி.
பாசிப்பயறு, உளுந்து, தட்டை, துவரை ஆகிய பயறு வகைப் பயிர்கள் பொதுவாக 30 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படும். ஆனால் இந்த ஆண்டு 22 ஆயிரத்து 500 ஏக்கரில் பயிரிடப்பட்டன. இதில் சுமார் 6500 ஏக்கரில் பயிரிடப்பட்ட பயிர்கள் காய்ந்துவிட்டன. ஏக்கருக்கு ரூ.6000 வீதம் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.3.90 கோடி.
எண்ணெய் வித்துப் பயிரான நிலக்கடலை 20 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்படும். இந்த ஆண்டு 12 ஆயிரத்து 500 ஏக்கரில் மட்டும் பயிரிடப்பட்டது. இதில் 1500 ஏக்கரில் பயிரிடப்பட்ட நிலக்கடலைப் பயிர்கள் காய்ந்துவிட்டன. ஏக்கருக்கு ரூ.8000 வீதம் விவசாயிகளுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1.20 கோடி.
கோவை மாவட்டத்தில் நிலவும் வறட்சியால் பயிர்கள் காய்ந்ததில் இதுவரை ரூ.12.51 கோடி அளவுக்கு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வறட்சியால் காய்ந்து போன வாழ்நாள் பயிரான தென்னை குறித்த விவரங்களையும் அதிகாரிகள் தொகுத்து வருகின்றனர்.
இது தொடர்பாக வேளாண்மைத் துறையினரும் வருவாய்த் துறையினரும் தனித்தனியாக அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். நிவாரணம் குறித்த அறிவிப்பு சட்டப்பேரவையில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகளிடம் எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.